Skip to main content

திமுக இதில் மட்டும் பாஜகவை முழுமையாக ஆதரிப்பது ஏன்? - ஜி.கே. மணி கேள்வி  

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

'Why does the DMK fully support the BJP's stand on this alone?' - GK Mani question

 

'பாஜக அரசின் அனைத்து கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் எதிர்க்கும் திமுக, என்எல்சி விவகாரத்தில் மட்டும் பாஜகவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பது ஏன்?' என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சென்னையில் வீராவேசம் செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என்.எல்.சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இழப்பீடு கிடைக்க குரல் கொடுத்தது திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி கொடுக்க பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி உயர்த்திக் கொடுக்க வைத்தது திமுக அரசு தான். திமுக அரசு மீதும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதும் விவசாயிகள் வைத்துள்ள நம்பிக்கையை அன்புமணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அமைதியாக இருக்கும் மக்களைத் தூண்டிவிட்டு சதித் திட்டத்தை உருவாக்குகிறார்.

 

சென்னையில் வீராவேசமாகப் பேசும் அன்புமணி டெல்லியில் கைக்கட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என்.எல்.சி விரிவாக்கத்தைக் கைவிடமாட்டோம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்த போது குறைந்தபட்சம் மாநில அவையிலிருந்து அன்புமணி ராமதாஸ் வெளிநடப்பு செய்யாதது ஏன்? அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கதவைத் தட்டும் என்பது அன்புமணிக்கு தெரியும். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மண்ணையும் மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் திமுக எடுக்கும் என முதலமைச்சரை நம்பும் வட மாவட்ட மக்களை அன்புமணியின் கபட நாடகங்கள் மூலம் திசை திருப்பி விட முடியாது’ எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்குப் பதில் தரும் விதமாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'அதில் என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இல்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதிலுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வினா எழுப்பியிருக்கிறார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் திமுகவின் துரோகம் அவரது அறிக்கை வாயிலாகவே அம்பலப்பட்டிருக்கின்றது.

 

'Why does the DMK fully support the BJP's stand on this alone?' - GK Mani question

 

தமிழ்நாட்டின் மிக முக்கியத் துறையான வேளாண்துறையின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு வேளாண்துறை மீதும் உழவர் நலனிலும் தான் அக்கறை இல்லை என்று பார்த்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது விவகாரங்கள் குறித்த அடிப்படை பார்வை கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது.

 

நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் பதில்களுக்கும் அவை நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுப்பினர்களின் வினாக்களுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது. மாறாக உறுப்பினர்களின் இணைய பக்கத்திலும் நாடாளுமன்ற அவைகளின் இணையதளங்களிலும்தான் வெளியிடப்படும். அவற்றின் மீது எந்த எதிர் வினாவும் எழுப்ப முடியாது, விவாதமும் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு இது கூட தெரியாதது பரிதாபம்தான்.

 

அடுத்ததாக தமிழ்நாட்டில் என்.எல்.சி சுரங்கத் திட்டங்களைத் திரும்பப்பெற முடியாது என்று மத்திய அமைச்சர் கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான். தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் 1956 ஆம் ஆண்டிலிருந்து என்.எல்.சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமம் வரும் 2036 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் என்.எல்.சி தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. அதை செய்யும் அதிகாரம் திமுக அரசுக்கு இருக்கும் நிலையில், அந்த அதிகாரத்தைச் செயல்படுத்தாமல் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது. திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக அன்புமணி ராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

பாஐக அரசின் அனைத்துக் கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் எதிர்க்கும் திமுக, என்எல்சி விவகாரத்தில் மட்டும் பாஜகவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது. இந்த மர்மத்தைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

உழவர்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு என்எல்சிக்கு ஆதரவாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செயல்படுவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. என்எல்சி நிறுவனத்தில் இருந்து திமுகவை சேர்ந்த அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கடந்த பல பத்தாண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. அதை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தால் மறுக்க முடியுமா? இப்போதும் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. இந்த அறிக்கையை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கமாட்டார். அவரது பெயரில் அவரது கட்சி தலைமையே எழுதி வெளியிட்டிருக்கும் என்பது தான் அந்த ஐயம்.

 

அந்த ஐயத்தைப் போக்க எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு அற்புதமான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த புதிய நிலக்கரி திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதி இன்றும் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

 

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து “சட்டப் பேரவையில் நீங்கள் அறிவித்தவாறு என்எல்சி மூன்றாவது சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுடன் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்துவேன்” என்று உறுதிபடக் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் அவரை மண்ணைக் காக்க வந்த வீரபாண்டிய கட்டபொம்மனாக கடலூர் மாவட்ட மக்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் மண்ணுக்குத் துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடம் பெறுவார். இது உறுதி'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்