ஓ.பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பன்னிர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார்.
கொறடாவின் உத்தரவை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் மீது சபாநாயகர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டார்.
சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சட்டப்பேரவை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தாத காரணத்தால் இந்த வழக்கில் சட்ட பேரவை செயலாளர் தரப்பில் பதில் அளிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு, திமுக தரப்பு பதில் வாதத்திற்காக வரும் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.