நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.
அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, திமுக பேச்சுவார்த்தை குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று (29.02.2024) நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு, திருப்பூர் எம்.பி கே.சுப்பராயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளை கேட்டுள்ளோம். மிக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அதில், திருப்பூரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்தனை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதே போல், நாகப்பட்டினம் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ம.செல்வராசு, அதிமுக வேட்பாளரான சரவணனை 2,09,349 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். முன்னதாக தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.