இராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைநகரம் ராணிப்பேட்டை. இந்த நகரத்தின் மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 30 வார்டுகள் உள்ளன. திமுகவிடம் 23 கவுன்சிலர்களும், அதிமுகவிடம் 4 கவுன்சிலர்களும், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் தலா ஒரு கவுன்சிலர் என்கிற கணக்கில் உள்ளனர்.
ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் தான் ராணிப்பேட்டையின் ராணியாகப்போகிறார் என்பது உறுதியானது.
ராணிப்பேட்டை நகராட்சியின் ராணியாகிவிட வேண்டுமென நான்கு பேர் போட்டியில் இருந்தனர். அதில் இருவர் தீவிரமாக காய் நகர்த்தினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மனைவி சுஜாதா, நகரத் துணைச் செயலாளர் ஏர்டெல்குமார் கவுன்சிலராகியுள்ள தனது அம்மா, கவுன்சிலர்கள் சங்கீதா அசேன், ராஜேஸ்வரி போன்றோர் முயற்சி செய்தனர்.
ராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதி, அவர் வசிக்கும் நகரம் என்பதால் நகர்மன்றத் தலைவியாக யாரைத் தேர்வு செய்வது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தினார். இறுதியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மனைவி சுஜாதாவை தேர்வு செய்தார். வினோத் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர், சுஜாதா முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்னியர்கள், முதலியார்கள், பட்டியலின மக்கள் வலிமையாகவுள்ளார்கள். வினோத் மனைவியை சேர்மனாக்குவதன் மூலம் இரு சமுதாயங்களை பிரதிநிதித்துவம் செய்தது போலாகிவிடும் என சுஜாதா வினோத்தை தேர்வு செய்தார் அமைச்சர் காந்தி.
அடுத்ததாக நகர் மன்ற துணை தலைவர் பதவி பட்டியலின மக்களுக்கு தரலாம் என முடிவு செய்தார் காந்தி. கழகத்திலுள்ள பட்டியலினத்தை சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவருக்கு தரலாமா என ஆலோசித்தனர்.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு வைஸ்சேர்மன் பதவி தரவேண்டும் எனக்கேட்டதால் அக்கட்சிக்கு வழங்கலாமா என ஆலோசனை நடத்தினர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் பாராளுமன்ற துணை செயலாளரான ரமேஷ்கர்ணா என்கிற கர்ணாகரனுக்கு வழங்க முடிவு செய்து கட்சியினரிடம் அறிவித்துள்ளனர்.
இராணிப்பேட்டை நகர்மன்றத்தின் ராணியாகப் போகிறவர் சுஜாதா என்பதும், துணைத்தலைவர் ரமேஷ்கர்ணா என்பதும் உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அனைத்து தரப்பினரும்.