Skip to main content

துணை சபாநாயகர் பதவியை ஏற்குமா திமுக? 

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

 


2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் 23 பேர். மக்களவை குழு திமுக தலைவராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு மக்களவை திமுக குழு தலைவராகவும், கனிமொழி துணைத்தலைவராகவும், ஆ.இராசா மக்களவை திமுக கொறடாவாகவும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

kanimozhi - t.r.balu



இதற்கிடையே, மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கவிருக்கும் மோடியின் தலைமையில் புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்றதும் லோக்சபா சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை துவங்கவுள்ளது. பாஜகவை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். துணை சபா பதவி எதிர்கட்சியினருக்கு வழங்கப்படுவது மரபாக இருக்கிறது. அந்த வகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவி எந்த கட்சிக்கு கிடைக்கும் என்கிற விவாதம் நடந்து வருகிறது. 


 

 


2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.  துணை சபா பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக மோடி அரசு முடிவு எடுத்த போது அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. அந்த சூழலலில், 37 இடங்களை கைப்பற்றி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவுக்கு வாய்ப்புக் கிடைக்க, அதனை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து துணை சாபாநாயகராக  தம்பிதுரை நியமிக்கப்பட்டார். 
 

தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை பெற்றுள்ளது. முந்தைய தேர்தலைப் போல  துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் ஏற்க மறுத்தால் திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை திமுக பயன்படுத்திக்கொள்ளுமா? என்கிற  விவாதமும் துவங்கியுள்ளது. வாய்ப்பை திமுக பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் திமுக எம்.பி.க்களில் யார் நியமிக்கப்படலாம் என்கிற விவாதம் அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 


நாடாளுமன்றத்தில் அனுபவம் உள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவரைத் தான் துணை சபா பதவியில் அமர வைக்க கட்சி தலைமை முடிவு செய்யும். அந்த வகையில், திமுகவில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். ஆனால், அந்த பதவியில் அமர்ந்தால் கட்சி சார்ந்து பிரச்சனைகளை அணுகாமல் நடுநிலையாகத்தான் செயல்பட வேண்டும். அதுதான் மரபு. 

 

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு திட்டங்களை கொண்டு வருகிற போதோ, மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதோ அதனை  எதிர்த்து திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பேச வேண்டும். குறிப்பாக, டி.ஆர்.பாலு, ஆ.இராசா, கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து பேசக்கூடியவர்கள். அப்படிப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவரை  துணை சபாநாயகர் பதவியில் அமர வைக்க திமுக தலைமை விரும்புமா? என்றும் விவாதங்கள் நடந்து வருகிறது.


 

சார்ந்த செய்திகள்