அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகள், தகுதி வாய்ந்த மகளிரை எப்படி தேர்வு செய்வீர்கள், யாரெல்லாம் தகுதி வாய்ந்த மகளிர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், “இந்தத் திட்டம் யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது. 'பகிர்தல் அறம்' என்றும்; 'பசித்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்றும்; தமிழ் மரபின் தாக்கத்தால் உருவான நலத் திட்டங்களின் நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை, உரிய நேரத்தில் தேடித் தேடி வழங்குவதில்தான் இருக்கும்.
'அனைவருக்கும் வீடு' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் கனவு இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள். 'அனைவருக்கும் நிலம்' என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்' என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.
அந்தவகையில், இந்த 'மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” எனக் கூறினார்.