Skip to main content

ஜெ.படத்தை சட்டசபையில் எங்கு மாட்ட வேண்டும்? பரபரப்பு பிரச்சாரம்

Published on 11/02/2018 | Edited on 11/02/2018

 

sata panchayat iyakkam


 தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், சட்ட பஞ்சாயத்து இயக்கம், ‘’ஜெயலலிதா படம் - சட்டசபைக்கு கரும்புள்ளி’’ என்று பரபரப்பு பிரச்சாரமே செய்து வருகிறது.

 

இந்த பிரச்சாரம் குறித்த சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் அறிக்கை:’’அவசர அவசரமாக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படவுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரதான குற்றவாளியின் படத்தை சட்டசபையில் திறப்பது தவறான முன்னுதாரணம். ஜனநாயகத்திற்கு விரோதமானது. உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு போன்றது. ஆகவே, சட்ட சபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்கம் “கரும்புள்ளிப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.

 

60 ஆண்டுகள் நடந்து வைரவிழா கண்ட பாரம்பரியமிக்க தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் இருப்பது ஒரு கரும்புள்ளியே என்பதை வெளிப்படுத்தும்விதமாக இப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.  பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் அனைவரும் தங்களது முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் வெள்ளைப் பின்புலத்தில் ஒரு கருப்புப்புள்ளி இருப்பதுபோன்ற படத்தை தங்களது சுயவிவரப்படமாகவும், முகப்புப்படமாகவும் மாற்றி  சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு ஜனநாயக முறையில், அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

 

சட்டசபையில் எங்கு மாட்ட வேண்டும் படத்தை..? ஜெயலலிதா படம் சட்டசபையில் திறக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்பது நம் கருத்து. இருந்தபோதும், அதிமுக அதைச் செய்யத்தான் போகிறது. ஆகவே, ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை. இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என்று நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார்,காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கமும்; “...இவர் போல் பொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக்கூடாது” என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தை மறுபக்கமும் மாட்டி வையுங்கள் என்பதே கோரிக்கை.’’

சார்ந்த செய்திகள்