அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ப.கா.செல்வத்தை ஆதரித்து சனிக்கிழமை மாலை சின்னதாராபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு பள்ளப்பட்டி ஷா நகர் கார்னரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொண்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அப்போது, கடந்த 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் நான் எதிர் பிரசாரம் மேற்கொண்டேன். அப்போது கரூரில் அ.தி.மு.க. சார்பில் நின்ற செந்தில்பாலாஜி என்னை பிரசாரத்திற்கு அழைத்தபோது, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிராக பிரசாரம் மேற் கொண்டேன். ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரவக்குறிச்சி தேர்தலையொட்டி செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இது பதவிவெறி, பணவெறி அரசியலை தான் காட்டுகிறது. நீட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களையெல்லாம் அனுமதித்தது காங்கிரஸ். ஆனால் தற்போது அவர்களே ஓட்டுக்காக எதிர்ப்பு குரல் எழுப்பி வேஷம் போடுகின்றனர்.
மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை உள்ளிட்டவற்றால் இயற்கை வளம் அதிகளவில் சுரண்டப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டு பசுமை திட்டம், பலகோடி பனைவிதை தூவும் திட்டம் ஆகியவற்றால் இயற்கையை பாதுகாப்போம். வீடு கட்ட மரத்தை வெட்ட வேண்டும் என ஒருவர் அனுமதி கேட்டால் கூட, அதற்கு ஈடாக 100 மரங்களை நட வேண்டும் என அன்பான கண்டிப்புடன் சொல்வோம்.
4ஜி தொழில்நுட்பத்தில் தற்போது செல்போன் பயன்பாடு உள்ளது. எத்தனை “ஜி” தொழில்நுட்பம் வந்தாலும் கஞ்சி விவசாயி தான் ஊற்ற வேண்டும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதி வறண்ட பகுதியாக இருந்த போதிலும் முருங்கைசாகுபடி அதிகளவு நடக்கிறது. ஆனால் உற்பத்தி அதிகமாகும் போது சேமித்து வைக்க முருங்கை பதப்படுத்தும் கிட்டங்கி இல்லை. முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்கப் படவில்லை. குடிநீருக்கு நீராதாரமாக விளங்கும் தாதம்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்படவில்லை. இவ்வாறு கூறினார்.