அண்ணாமலை மீது அவரது கட்சியில் இருந்த பெண் வைத்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் திமுக எம்.பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக கூட்டத்தில் நடந்ததற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்கச் சொல்லியுள்ளார். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள். அந்த நிகழ்வு நடந்தபொழுது நான் அங்கு இல்லை. கூட்டம் முடிந்ததும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கூட்டம் நடக்கும் போதும் எல்லாரும் எல்லா இடத்தையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆனால் நடந்துள்ளது என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனால் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மற்றவர்களைக் குறை சொல்லும் அண்ணாமலையைப் பற்றி அவரது கட்சியில் இருந்த பெண் ஒருவரே குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப்போகிறார். அதற்கு கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என பதில் சொல்லட்டும்” எனக் கூறினார்.