அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் வழியிலான மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகத் தனது கீழ் இயங்கும் 11 உறுப்புக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்த பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் பாடப் பிரிவுகள் நிறுத்தப்படுவதாக சொன்ன அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் படிக்கும்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூட தமிழ் வழிக் கல்வி கிடையாது. ஆங்கிலம் மட்டும் தான். இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். அண்ணா வந்த பின் சமூகவியல் பாடப் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வந்தார். கலைஞர் வந்த பின்பு தான் அறிவியல் பாடப் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வந்து கல்லூரிகளில் தமிழைப் புகுத்தியவர் கலைஞர். அதுமட்டுமல்ல தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என உத்தரவிட்டவரும் கலைஞர் தான். இந்தாண்டு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகளிலும் தமிழை புகுத்த வேண்டிய திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறோம்.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு அரசுக்கே தெரியாது. அந்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். தமிழ் மொழியில் பொறியியல் கல்வி என்பதை மற்ற பிரிவுகளிலும் விரிவுபடுத்தி படிப்பதற்கு ஆவண செய்யப்படும். அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து பேசியுள்ளோம். எந்த பல்கலைக்கழகத்தில் எந்த புதிய பாடங்களைக் கொண்டு வந்தாலும், இருக்கின்ற பாடத்தை நீக்கினாலும் அரசின் செயலருக்கு அறிவித்த பின்பே செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் செயல்பட்டுள்ளார். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என அவர் சொல்கிறார். குறைவாக இருந்தாலும் இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு ஆசிரியர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். நான் சொன்னதும் அவர் அதை மாற்றிக்கொண்டார்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று தெரிந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றினார். துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என்ற சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாகத்தான் மாநிலக் கல்விக் கொள்கையும் அதற்காக ஒரு குழுவையும் நியமித்து மாநிலக் கல்விக் கொள்கை வெகு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார்.