Skip to main content

2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நடந்தது என்ன? - வைத்திலிங்கம் விளக்கம் 

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

What happened between OPS and EPS in 2017? Explanation of Vaithlingam

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இபிஎஸ் பதவி விலக வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓபிஎஸ்ஸை அரவணைத்து துணை முதலமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் இபிஎஸ்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் ஜெயக்குமாரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஓபிஎஸ் அறிக்கை விடுத்ததும், ஆத்திரத்தில் அவர் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவை பழனிசாமி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்தவுடன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக்கு மாறான தகவல்களை அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், பன்னீர்செல்வத்தை அரவணைத்து துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பழனிசாமி வழங்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ள பன்னீர்செல்வத்தை அணுகி ஆட்சியைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டவர் பழனிசாமி.

 

2017-ம் ஆண்டில் ஓபிஎஸ் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அன்றே பழனிசாமி ஆட்சி அஸ்தமனமாகி இருக்கும். இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறுவது பண்பற்ற செயல். கோடநாடு கொலை வழக்கு தாமதப்பட்டு வருகிறது. திமுகவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் பழனிசாமியும் அவரது கூட்டாளிகளும்தான். மக்கள் முடிவுக்கு மாறாகச் செயல்படும் பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அதிமுக சந்தித்து வெற்றி பெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்