மத்திய மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து போராடுகின்றன அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும். இந்த நிலையில், தமிழகத்தில், இத்தகைய சட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி தரும் அசைன்மெண்டை தமிழக பாஜகவினருக்கு தந்திருக்கிறது டெல்லி!
அந்த வகையில், நடிகர் கார்த்தியின் அறிக்கைக்கு எதிராக கச்சைக் கட்டுகிறார் நடிகை காயத்தி ரகுராம். உழவன் பவுண்டேசன் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார் நடிகர் கார்த்து. அந்த அமைப்பின் சார்பாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துள்ள நடிகர் கார்த்தி, "இந்த மண்ணில் விவசாயிகளுக்கு இருக்கும் உரிமையும், தங்களுடைய விளைப்பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகளின் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடை மாற்றம் செய்யப்பட்டு விடும். அதனால் இந்த சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார்.
நடிகர் கார்த்தியின் கருத்தை எதிர்க்கும் காயத்ரிரகுராம், "விவசாயிகளுக்கும் பொதுமக்களும் நீங்கள் தவறான தகவலை சொல்கிறீர்கள் என என்னால் பந்தயம் கட்ட முடியும். உங்களுடைய கருத்து தீங்கு விளைவிப்பதாகும். உங்களுடைய என்.ஜி.ஓ. ஆர்வத்திற்காக இதையெல்லாம் செய்கிறீர்கள். மசோதாவின் உண்மையை விவசாயிகள் அறிந்துள்ளார்கள். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் எந்தளவுக்கு பயனடைவார்கள் என நான் உங்களுடன் விவாதிக்கத் தயார். நீங்கள் தயாரா? அறிஞர்களுடன் பொது ஊடகங்கங்களின் முன் வாருங்கள். நான், விவாதிக்கத் தயார். பொதுமக்களை முட்டாளாக்க வேண்டாம்" என கொந்தளிக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.