கமல்ஹாசனை காங்கிரஸ் வரவேற்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து இந்த யாத்திரையைத் தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல்காந்தி, கடந்த சில தினங்கள் முன் இந்த நடைபயணத்தில் 100 ஆவது நாளை நிறைவு செய்தார்.
இந்நிலையில், 100 நாட்களைக் கடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் நேற்று திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். நேற்று 107 ஆவது நாளின் நடைபயணத்தை அரியனா மாநிலம் சோனா அருகே தௌஜ் என்கிற இடத்தில் நேற்று ராகுல் காந்தி தொடங்கினார். இந்த பயணத்தில் திமுக சார்பில் திமுக துணைத்தலைவரும் எம்.பியுமான கனிமொழி கலந்துகொண்டார்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தில் 108 ஆவது நாளான இன்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் இணைவார் என்று இதற்கு முன்பே சொல்லப்பட்டது. மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு, பூத் கமிட்டி, 2024 தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி பேசப்பட்டது.
ஒரு முக்கியப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தோம். அதைப்பற்றி கட்சிக்காரர்கள் தகவல் தெரிவிப்பார்கள். கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கவில்லை. கூடிய விரைவில் அது உங்களுக்குப் புரிய வரும். எந்தத் திசையை நோக்கி நான் சென்று கொண்டு உள்ளேன் என்பது விரைவில் உங்களுக்குப் புரியும். என் பயணத்தை நீங்கள் புரிந்து கொண்டாலே அது புரிந்து விடும். வெகு விரைவில் பயணத்தைத் துவங்க உள்ளேன். ஒரு வாரத்திற்குள்ளாகவே பயணம் துவங்கப்படும்” என்றும் கூறியிருந்தார்.
இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கமல்ஹாசன் ராகுல்காந்தியுடன் இணைவது கூட்டணி என்பதெல்லாம் அல்ல. கமல்ஹாசன் மதச்சார்பற்ற கொள்கையை உடையவர். நல்ல சிந்தனையாளர். சமூக செயற்பாட்டாளர். அவர் ராகுல்காந்தியுடன் கைக்கோர்ப்பதை தமிழக காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், கூட்டணிக்கும் இந்த பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை” எனக் கூறியுள்ளார்.