தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே உதயநிதி ஸ்டாலின், திறந்த வேனில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியிலும் திமுகவை வெற்றி பெற வைத்தீர்கள். கரூர் மாநகராட்சியிலும் வெற்றியை தேடி தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற 8 மாதத்தில் மிகப்பெரிய சாதனையை திமுக அரசு செய்துள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. 2 தவணைகளாக 4000 தரப்பட்டது. பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், இல்லம் தோறும் கல்வி, நம்மை காக்கும் 48, மின் நுகர்வோர்களுக்கு மின்னகம் மூலமாக 24 மணி நேர சேவை.
வட மாநில பத்திரிக்கை சர்வே ஒன்று இந்தியாவில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் என்று கூறியுள்ளது. இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு தமிழக முதல்வர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என நேரில் சென்று தமிழக முதல்வர் வைத்த கோரிக்கைக்கு ஆளுநர் செவி சாய்க்கவில்லை. மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மசோதா நிறைவேற்றி அனுப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஆளுநர் அவர்களே தற்போது நடைபெறுவது அடிமை அதிமுக ஆட்சி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மோடிக்கு சவால் விடும் விதமாக ராகுல்காந்தி பேசி உள்ளார். தமிழக மக்கள் சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 48 பேரில் ஒருநபர் ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். மீதமுள்ள 47 பேரை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என பேசினார்.
இந்தப் பிரச்சாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினுடன் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான செந்தில்பாலாஜி உடனிருந்தார். தொடர்ந்து வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.