அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்பு ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புகளுக்கு இடையே முரண்கள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையருக்கு ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியானது தனியார் மண்டபத்தில் நடைபெறுவதால் அதற்கு தடை விதிக்க முடியாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு தான் சம்மதம் தெரிவிப்பதாகவும், அதனைத் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில், 'பொதுக்குழுவில் இது நடக்கலாம் இது நடக்கக் கூடாது என்று கூற இயலாது. எந்த செயல்திட்டங்களும், அஜெண்டாக்களும் இல்லாமலே இதற்கு முன் பொதுக்குழுக்கள் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுக்குழுவுக்கு அஜெண்டா கொடுப்பதே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது.
பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்று உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட நீதிபதிகள், அஜெண்டா இல்லாமல் எப்படி பொதுக்குழுவை நடத்துவீர்கள்? என எடப்பாடி தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஏற்கனவே 'தர்மம் மீண்டும் வெல்லும்' என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஓபிஎஸ், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு 'தர்மம் மீண்டும் வென்றது' என தெரிவித்திருந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்குப் பிறகு இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், '' ஒற்றைத் தலைமை முடிவில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த தீர்ப்பால் கட்சிக்கு பின்னடைவு இல்லை. மேல்முறையீடு செய்வது தொடர்பாகக் கட்சித் தலைமை முடிவு செய்யும்'' என்று கூறினார்.