தமிழக அரசின் சொத்துவரியை உயர்த்தும் முடிவைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது.
இந்நிலையில் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டமானது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இன்று நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தையும் தலைமை தாங்குகின்றனர். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.