கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே. சிவகுமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “கர்நாடகத்தில் நாங்கள் அளித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ. 50,000 கோடி தேவை. மோடி அரசால் கர்நாடகம் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. ஜி.எஸ்.டி. மூலம் கிடைக்கும் அதிக வரியானது மத்திய அரசுக்கே செல்கிறது. கர்நாடகத்திற்குத் தேவையான நிதியைப் பெறக் கடந்த பாஜக அரசு எந்த விதமான முயற்சியையும் எடுக்கவில்லை.
மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்குக் கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையான ரூபாய் 5 ஆயிரத்து 495 கோடி இன்னும் கிடைக்கவில்லை. பாஜகவின் 25 எம்.பி.க்களும் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து வாய் திறக்கவில்லை. கர்நாடகத்திற்குச் சேர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைக் கடந்த பாஜக அரசு மத்திய அரசிடம் கேட்கவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு மத்திய அரசு அநீதியை இழைத்து வருகிறது” எனக் கூறினார்.