அண்மையில் கட்சி நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நாளைக்கு தேர்தல் வருகிறபோது நீங்கள் கொடியேற்றிய இடத்தில் யார் யாரெல்லாம் வந்தார்களோ அவர்கள் எல்லாம் வாக்குச்சாவடி உறுப்பினர்கள். முதலில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அதில் உறுப்பினர்களாக போடுங்கள். உங்கள் சொந்தக்காரர்களை உறுப்பினர்களாக போடுங்கள், உங்கள் ஜாதிக்காரர்களை உறுப்பினராக போடுங்கள், உங்கள் நண்பர்களை உறுப்பினராக போடுங்கள், ஒரு பெரிய வாக்குச்சாவடி கமிட்டியே அங்கே வந்துவிடும். வராமல் எங்கு போய்விடும். ஒரு முறைக்கு இரண்டு முறை போய் கேட்டீர்கள் என்றால் வருவார்கள். படை பலத்தை உருவாக்குவது என்பது அப்படித்தான்.
ஒரு சிறந்த படை இருந்தால் தான் போரிட முடியும். 23ஆம் புலிகேசி படத்தில் வருவதை போன்று வாள் கிடையாது, கேடயம் கிடையாது, குதிரை கிடையாது, யானை கிடையாது. அப்படி இருந்தால் எப்படி யுத்தத்திற்கு போக முடியும். எனவே அதைச் செய்தால் தான் நாம் யுத்தத்திற்கு போகலாம். தோழர்களே இது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு. ராகுல் காந்தி இல்லையென்றால் இந்த நம்பிக்கை வராது. ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவன் வேண்டும். எந்த கூட்டமும் தலைவன் இல்லாமல் செயல்படாது. ஒரு சிறந்த தலைமையை கொடுக்கக்கூடிய பண்பு ராகுல் காந்திக்கு இருக்கிறது. நான் தலைவரான பிறகு ராகுல் காந்தியோடு நெருக்கமாக பழகி இருக்கிறேன். ஒரு நான்கு ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக அவருடன் காரில் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்பொழுது அவரிடம் நான் கண்டுபிடித்தது என்னவென்றால் ரொம்ப ரொம்ப நல்ல பையன். அரசியலில் நாம் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம். நான் கண்டுபிடிச்சேன் அவன் ரொம்ப ரொம்ப நல்லவர். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஒரு புடம் போட்ட தங்கம் என்று சொல்லலாம். அந்த தன்மைகள், அந்த தகுதிகள் அவரிடம் இருக்கிறது. துறவறம் அடைவதற்கு கூட மிகப் பெரிய தைரியம் வேண்டும். ஒன்றைப் பெறுவதில் எவ்வளவு ஆர்வம் இருக்கின்றதோ, அதில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைவிட ஒன்றைத் துறப்பதில் அதைவிட மகிழ்ச்சி கிடைக்கிறது.
பதவியைப் பெறுவதில் இருக்கின்ற மகிழ்ச்சியைப் போலவே பதவியைத் துறப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை ராகுல் காந்தி அடைந்திருக்கிறார். இல்லையென்றால் இந்த பதவி எல்லாம் என்ன, அவர் ஈசியாக வாங்கிக் கொள்ளலாம். அவர் நினைத்தால் முடியாததா, கேட்டால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள். 2019-ல் மன்மோகன் சிங்கே சொன்னார் 'எனக்கு ரொம்ப வயசாகிவிட்டது ராகுல் காந்தியை பிரதமராகக் கொண்டுவரலாம்' என்று கட்சியின் செயற்குழுவில் அவரே சொன்னார். அப்பொழுது ராகுல் காந்தி சொன்னார் 'நான் நாடு முழுக்க போகணும்' இப்படித்தான் சொல்லி அதை அவர் தட்டிக் கழித்தார். எனவே நண்பர்களே, காங்கிரசுக்கு சொந்தமானது மதச்சார்பின்மை என்பது. நமக்கு மதம் உண்டு, கடவுள் உண்டு ஆனால் அதைச் சார்ந்து நமது பொது வாழ்க்கை இருக்காது. அதுதான் மதச்சார்பின்மை'' என்றார்.