குடியாத்தம் தனி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் காத்தவராயன், அதிமுக சார்பில் கஸ்பா.மூர்த்தி, அமமுக சார்பில் ஜெயந்திபத்மநாபன் உட்பட 7 பேர் களத்தில் உள்ளனர். குடியாத்தம் நகர கவுன்சிலராக கஸ்பா.மூர்த்தி இருந்தபோது, மார்க்கெட் தண்டல் போன்றவற்றால் ரவுடிஸத்தில் ஈடுப்பட்டது, நகராட்சி சேர்மன்களாக இருந்த பிற சாதியினரை தாக்கியது போன்றவற்றால் வழக்குகள் பதிவானது. அது எல்லாம் கஸ்பா.மூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மக்கள் மனதில் உயிர்பித்துள்ளது.
குடியாத்தம் நகரத்தில் பலமாகவுள்ள முதலியார் சாதியினர், ரகசியமாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை, திமுக வேட்பாளர் சாதுவானவர் அவருக்கு ஆதரவு அளிப்போம் என முடிவு செய்து வாய்வழி பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென, சில செய்தித்தாள்களில், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநில தலைவர் செல்வராஜ், திமுக வேட்பாளர்க்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரம் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி ஏதுவும் பிரச்சாரம் செய்யவில்லை. சங்கம் அரசியலில் ஈடுப்படவில்லை. சமூகப்பணி, சங்கப்பணிகளை மட்டுமே சங்கம் செய்கிறது. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, திமுக வேட்பாளர் காத்தவராயன், முதலியார் சங்க நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கேட்டார். அவர்களும் சரியென்றார்கள். அந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வெளியானது. இதைப்பார்த்து அதிருப்தியான ஆளும் கட்சியான அதிமுகவினர், எங்களை எதிர்த்தா என்ன நடக்கும்ன்னு தெரியுமில்ல, ஒழுங்கா நீங்கள் தொழில் செய்ய முடியாது என மிரட்டியுள்ளனர். அதோடு, வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது சாதி சங்க பிரமுகர்களிடம் பேசினார். அதன்பின்பே இப்படியொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது என்கிறார்கள்.