தொடர்ந்து எதிர்க்கட்சியினரை நோக்கி அச்சுறுத்தும் வார்த்தைகளில் பேசிவரும் பிரதமர் மோடியை எச்சரியுங்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடந்துமுடிந்தது. இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தாக்குகிறார் என்ற குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து பிரதமர் மோடி நேரு உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். கடும் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்குமாறு குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘மிகவும் மோசமான, மிரட்டும் தொணியில் மற்றும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை மோடி பயன்படுத்தி வருகிறார். நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவருக்கு இது பொருத்தமற்றது. இந்திய அரசியல் சாசனத்தின் உயரிய பதவியில் இருக்கும் தாங்கள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் பழமைவாய்ந்த கட்சி. இதுபோன்ற ஏராளமான மிரட்டல்கள், சவால்களை எதிர்கொண்டு வெற்றிகொண்ட பெருமையும் அதற்கு உள்ளது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சும் கோழைகளல்ல காங்கிரஸ் கட்சியினர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.