தமிழ்நாடு அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
அதன்படி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் மாநகர பேருந்து நிலையம் அருகில் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “சட்டப்பேரவைத் தேர்தலின் போது கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட மாட்டாது என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திமுக, கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது.
கரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைவு என்று பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும் நகர்ப்புற மக்களின் தலையில் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தியுள்ளது திமுக அரசு. இந்த சொத்து வரி உயர்வு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு சொத்துவரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டிக்கிறோம், சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என பேசினார்.