Skip to main content

''வாக்காளர்களை விலைக்கு வாங்கி வீட்டில் அமர வைத்துள்ளனர்'' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

"Voters have been bought and kept sitting" - Edappadi Palaniswami review

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து 15ந் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் ஈரோட்டில் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. 15ந் தேதி மாலை வீரப்பம்பாளையம் என்ற பகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு எளிமையானவர். இதே தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்து பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. இத்தொகுதியில் ரூபாய் 484 கோடியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனை தரம் உயர்வு, வணிக வளாகம், ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கம், மேம்பாலம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

 

ஆனால், திமுக ஆட்சி அமைந்து 21 மாதங்கள் ஆன நிலையில், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இப்போது வீதி வீதியாக வாக்கு கேட்டு வரும் அமைச்சர்கள், தேர்தலுக்கு முன்பு குறை கேட்க வந்தார்களா? மக்களை ஏமாற்றுவதற்காக அமைச்சர்கள் புரோட்டா போட்டும், டீ போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் உங்களை அமைச்சராக்கியுள்ளனர். டீ, போண்டா, புரோட்டா  போடுவதற்காக அமைச்சராக்கவில்லை. இடைத்தேர்தல் வந்ததால், இப்போது மட்டும் மக்கள் அவர்கள் கண்ணுக்கு தெரிகின்றனர். திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அத்தனை அமைச்சரையும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். இதே மாதிரி அமைச்சர்கள் முன்பே வந்து பார்த்திருந்தால் மக்களுக்கு குறையே இல்லாமல் போயிருக்கும்.

 

ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை  சந்திக்க அனுமதிக்க வேண்டும்.  அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி, சக்தி இல்லை. அதனால், ஏழை மக்களை 120 இடங்களில் கொட்டகை அமைத்து அமர வைத்துள்ளனர். தற்போது நான் பிரச்சாரத்திற்கு வந்ததால், அவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் கிடைத்துள்ளது. கொள்ளையடித்த பணம் மக்களுக்கு போனதில் எனக்கு மகிழ்ச்சி. 2 வேளை பிரியாணி போட்டுள்ளனர். சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு இரட்டை இலையில் வாக்களியுங்கள்.

 

ஈரோடு கிழக்கில் அதிமுகவினரை காணவில்லை என காங்கிரஸ் தலைவர் அழகிரி சொன்னார். அப்படியென்றால் வாக்காளர்களை ஏன் அடைத்து வைக்கிறீர்கள்? அதிமுகவை கண்டு பயப்படுகின்றனர். என்றைக்கு அவர்களுக்கு பயம் வந்ததோ, அன்றே நமது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்கிறவர்கள், வாக்காளர்களை ஏன் அடைத்து வைக்கிறீர்கள்? அவர்களது கூட்டணிக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பதால், திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது.

 

திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்களில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எழுதாத பேனாவிற்கு ரூ. 81 கோடியில் கடலில் நினைவுச்சின்னம் எதற்காக அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பேனா நினைவுச்சின்னம் வைக்கும் தொகையை ஏழை முதியவர்களுக்கு கொடுக்கலாமே. இந்த தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு எழுதும் பேனா கொடுக்கலாமே. திமுகவிற்கு எடுத்து தான் பழக்கம். கொடுத்து பழக்கம் இல்லை.

 

அம்மா உணவகத்தை முடக்கப் பார்க்கின்றனர். அதிமுக ஆட்சியில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை நிறுத்திவிட்டனர். உதயநிதி இங்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை சொல்லுமாறு கேளுங்கள். தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்கினால், அதனை ஸ்டாலினுக்கு வழங்கலாம். அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம் அடைந்தார்கள்.  திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  எல்லா குடும்பத் தலைவிக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாகச் சொன்னவர்கள், தற்போது கணக்கெடுப்பதாக நிதி அமைச்சர் சொல்கிறார்கள். சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் கொடுக்கவில்லை. இடைத்தேர்தல் முடிந்ததும் அமைச்சர்கள் எல்லாம் போய் விடுவார்கள்.

 

இடைத்தேர்தலில் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திமுகவினர் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள்" என திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து காட்டமாகப் பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி. 

 

 

 

சார்ந்த செய்திகள்