![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/jptKrXP4hrpp-CeigjgrEB7zTrTCfzVQfp_YfO97C2Y/1604477699/sites/default/files/inline-images/46_8.jpg)
விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக தலைமையேற்று சிறப்புரையாற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது அவர், கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளும் அதள பாதாளத்துக்கு போய்விட்டன. விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம் என்பதால் கல்வித்துறை சீரழிவுகளை மட்டும் சொல்கிறேன்.
புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைக் கொல்லும் கொள்கை! அனைவருக்கும் கல்வி என்பதை சிதைக்கக் கூடியதாக மத்திய அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. சிலர் மட்டும் படித்தால் போதும் என்கிற அளவுக்கு தேர்வுகளைக் கட்டாயமாக்கி, பெரும்பாலான மாணவர்களைப் படிப்படியாக கல்விக் கூடங்களில் இருந்து படிப்படியாக விரட்டத் திட்டமிட்டு இருப்பதுதான் புதிய கல்விக் கொள்கை.
இந்தக் கல்விக் கொள்கையை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் தமிழக அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதில் இருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முன்முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் 13 மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதனைத் தற்கொலை என்று கூடச் சொல்லக் கூடாது. அது மத்திய - மாநில அரசுகள் நடத்திய கொலைகள்.
அந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்தது. கோச்சிங் செண்டர்களில் லட்சங்களைக் கட்டிப் படிப்பவர்களால்தான் வெற்றி பெற முடியுமானால், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட பட்டியலினப் பிள்ளைகள் எப்படி மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியும்? இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்திக்கவில்லை.
தி.மு.க.வின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமை இப்போது கிடைத்துள்ளது. இதற்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தார் முதலமைச்சர். அவர் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் நாம் செய்து அந்த மசோதாவுக்கு ஆளுநரின் அனுமதியை வாங்கித் தந்தோம்.
மத்திய அரசுடன் துணிச்சலோடு மோதுவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை!
இதேபோல் இன்னொரு துரோகத்தையும் மத்திய - மாநில அரசுகள் செய்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் இந்த வருடம் அப்படித் தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது.
இதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட முக்கியமாக மத்திய அரசு நியமித்த குழுவில், இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி அரசு சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட இரட்டைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்தது. சமூகநீதி விஷயத்தில் அ.தி.மு.க. அரசு ஆடிய பொய்யாட்டங்கள் தான் அதிகம்.
இதுதான் தமிழினத்துக்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும். மத்திய அரசைக் கேள்வி கேட்டால், அவர்கள் நமது கொள்ளையைத் தடுப்பார்கள்; நம் மீது வழக்குகள் பாயும் என்பதால் கைகட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் செய்து கொண்டு இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு” இவ்வாறு பேசினார்,