








விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளைச் சுற்றி வந்தோம். காலை 7 மணிக்கெல்லாம், பள்ளபட்டி அரசு மேல்நிலப்பள்ளியில், பெண்களும் ஆண்களும் நீண்ட வரிசையில் நின்றனர். 10 மணிக்கு மேலென்றால், கடும் வெயிலில் நிற்க வேண்டியதிருக்கும் என்பதால், முன்கூட்டியே வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனாலும், அவர்களின் ‘நேரம்’ ஓட்டு மெஷின் வேலை செய்யவில்லை. மாற்று மெஷினைக் கொண்டுவருவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலானதால், அந்த ஒரு மணி நேரமும் மனப்புழுக்கத்தில் தவிக்க வெண்டியதாயிற்று.
எந்த பதற்றமும் இல்லாத சிவகாசி காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாதுகாப்பு படையினர் தங்களுக்குள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போதே, டெம்பரேச்சர் பார்ப்பது, கைகளில் சானிடைசர் தெளிப்பது, கையுறை வழங்குவதெல்லாம், சரியாக நடந்துகொண்டிருந்தது. விருதுநகர் – சிவகாசி சாலையில் பழனியாண்டவர் தியேட்டர் அருகில், ஒருபக்கம் அதிமுக கூட்டணியினரும், எதிர்பக்கம் திமுக கூட்டணியினரும் ‘இலைக்கு போடுங்கம்மா..’, ‘கைக்கு போடுங்கம்மா..’ என்று வாக்காளர்களின் முகம் பார்த்து ‘கேன்வாஸ்’ செய்துகொண்டிருந்தனர். வாக்கு சேகரிப்பில், வழக்கம்போல் சிறுவர்களின் பங்களிப்பும் இருந்தது. ஒரு சிறுமி, கை சின்னம் பொறித்த கொடியை ஆட்டிக்கொண்டே இருந்தாள்.
திருத்தங்கல், கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு, தனது பரிவாரங்களுடன் வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்களித்ததும், ஒருவிரல் காட்டிவிட்டு சென்றார்.
நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வேண்டியிருந்ததால், பெற்றோர் தங்களது செல்போன்களை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு சென்றனர். நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை எதுவும் இல்லாத இளம்பிராயம் என்பதால், சிறுவர்கள் செல்போனில் ஆர்வமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஓட்டுக்கு பணம், டோக்கன் என அரசியல்வாதிகள் நடத்திவரும் விளையாட்டில் பங்கேற்றும், பங்கேற்காமலும் உள்ள வாக்காளர்கள், தங்களின் ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதை, செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர்.