தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (17.09.2024) மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும் வழங்க உள்ளார்.
அதே போன்று பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்க விருதுகளை வழங்கி மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார். திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா. மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன், பெரிய கருப்பன், ஆர்.காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.