விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்த்தவர் ஜெயபால். ஜெயபாலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜெயஸ்ரீயை அப்பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தீ வைத்து எரித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன், கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். தமிழக அரசு சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் இருவருக்கும் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், கலியபெருமாள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.