விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளும், ஊராட்சி மற்றும் நகர வார்டுகளில் பொறுப்பாளர்களும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பட்டியல், அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பிரிவில், 800 பேர் வரை புதிய நிர்வாகிகள் ஆகியுள்ளனர்.
இந்த நியமனம், இம்மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக, கோஷ்டி அரசியல் செய்து வருபவர்களை உஷ்ணப்படுத்திய நிலையில், ’2016-ல் மாவட்டம்தோறும், 14 ஐ.டி விங்க் நிர்வாகிகளை ஜெயலலிதா நியமித்தார். அப்போது, ஐ.டி விங்க் தூள் கிளப்பியது. 2020-ல், இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 800 பேரை நியமித்துள்ளனர். ஒரு சிலரைத் தவிர, மற்ற அத்தனை பேருமே வேஸ்ட்!’ என்று சமூக வலைத்தளங்களில், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
‘அத்தனை பேரும் வேஸ்ட்டா?’ என்று தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “பாதிக்கும் மேல அப்படித்தான்! வார்டு கவுன்சிலர்ல இருந்து, கிளைச் செயலாளர் வரைக்கும், மாமன், மச்சான், சொந்தக்காரன்னு, ஆளாளுக்கு சிபாரிசு பண்ணுன எல்லாருமே நிர்வாகிகளா ஆகிட்டாங்க. இவங்க எல்லாருமே ராஜேந்திரபாலாஜியோட வலுவான ஆதரவாளர்கள். இந்த மாதிரி சிபாரிசு பண்ணுனவங்க லிஸ்ட்ல, கட்சியோட ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஐயாவும் வர்றாரு.
சாம்பிளுக்கு ஒருத்தரை சொல்லுறேன். பேரு ராஜ்கமல். அவரு இருக்கிறது சென்னைல. ஆனா.. சொந்த ஊரு அருப்புக்கோட்டைன்னு சொல்லி, தகவல் தொழில்நுட்பப் பிரிவுல, விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஆயிட்டாரு. இவரோட ஃபேஸ்புக்ல போயி பார்த்தேன். அப்படி ஒண்ணும் ஆக்டிவா இல்ல.” என்றவர், “முகநூலில், குறிப்பாக பெண்களும், தங்களின் சுயவிபரங்களை வேறு யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று நினைப்பவர்களும்தான், ப்ரொஃபைலை ‘லாக்’ பண்ணி வைப்பார்கள். இங்கே கொடுமை என்னவென்றால், விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க பக்கத்தையே, லாக் செய்து வைத்திருக்கின்றனர். அது என்ன ரகசியப் பக்கமா? இப்படி இருந்தால் எப்படி?” என்று கேட்டார்.
விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ராஜ்கமலை தொடர்பு கொண்டோம். “அம்மா இந்த இயக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு வழி நடத்தினாங்க. அவருக்குப் பிறகு, ஆட்சியையும் கட்சியையும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பா நடத்திக்கிட்டிருக்காங்க. கட்சி மீது நான் வைத்திருக்கும் பற்றினையும் செயல்பாட்டையும் பார்த்துத்தான், எனக்கு இந்தப் பொறுப்பை கொடுத்திருக்காங்க.
கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து அரசியல் பண்ணுற குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆரம்பத்துல இருந்தே கட்சியின் அடிப்படை உறுப்பினரா இருந்துட்டு வர்றேன். கடந்த எம்.எல்.ஏ எலக்ஷன்ல, அருப்புக்கோட்டைல நடந்த பிரச்சாரக் கூட்டங்கள்ல கட்சிப் பணியாற்றி இருக்கேன். நான் மட்டுமில்ல, விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரிந்துரைத்த எல்லாருமே தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தகுதியானவங்கதான். அத்தனைபேரும் வேஸ்ட்டுங்கிறது எம்.எல்.ஏ அணி திட்டமிட்டுப் பரப்புற வதந்தி.
எங்களுக்கு எதிரான இந்த எதிர்மறையான பதிவும்கூட, எங்களுக்கு உத்வேகத்தையே கொடுத்திருக்கு. எந்த நோக்கத்தோடு புரட்சித் தலைவர் இந்தக் கட்சியை ஆரம்பிச்சாரோ, அதிலிருந்து விலகாம, ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், டிவிட்டர்ன்னு சமூக வலைத்தளங்களில், எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரத்திற்கு நிமிடத்திற்கு நிமிடம் தக்க பதிலடி கொடுப்போம்.” என்று மிகவும் சீரியஸாகப் பேசினார்.
அ.தி.மு.க ஐ.டி.விங் புதிய நிர்வாகிகளின் செயல்பாடு போகப்போக தெரிந்துவிடத்தானே போகிறது.