நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் பின்னணியில் இசைக்க, மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை வழியில் த.வெ.க. செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகிய 5 தலைவர்களைத் தான் நம்முடைய கொள்கைக்கு வழிகாட்டியாக வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், “ஆரம்பத்துல நான் சினிமாவிற்கு வந்தப்போ, மூஞ்சி சரியில்ல, ஆள் சரியில்ல, அழகு சரியில்ல, முடி சரியில்ல, உடை சரியில்ல, நடை சரியில்லன்னு அசிங்கப்படுத்துனாங்க... அவமானப்படுத்துனாங்க. ஆனால் நான் கொஞ்சம் கூட கலங்காமல் ஒவ்வொரு வாய்ப்புக்காக காத்திருந்து, உழைத்து மேல வந்தவந்தான். இந்த கூத்தாடி. அப்பக்கூட உழைப்பு மட்டும்தான் எண்ணுடையது. மற்றபடி எனக்கு கிடைத்த எல்லாம் புகழுக்கும் காரணம் நீங்கதான்.
என்கிட்ட இருக்கிறது உண்மை நேர்மை, உழைப்பு அவ்வளவுதான்; ஆனால் நீங்கதான் என்ன இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கீங்க. இப்போ அரசியலுக்கு அழைத்து வந்திருக்கீங்க. இங்கையும் எப்பவும் போலத்தான் உழைப்பேன். அதுக்கான முடிவு உங்களுடைய ஒவ்வொருத்தர் கையிலையும் இருக்கும்போது எனக்கு என்ன கவலை. எல்லாமே நல்லதாகவே நடக்கும். தேர்தல் அரசியல்ல தோற்றவங்க, ஜெயிச்சவங்கன்னு அனைவருடைய பாடத்தையும் படிச்சிட்டு பலபேருடைய உந்துதல ஊக்கமாக எடுத்துகிட்டு என்னுடைய கெரியரின் உச்சத்தை உதறிட்டு, அந்த சம்பளத்தை உதறிட்டு உங்க விஜய்யா... உங்கள மட்டுமே நம்பி வந்திருக்கேன்” என்றார்