ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
இந்தநிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வாசித்தது. அந்த உத்தரவில் 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அதற்காக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். வேட்புமனுவில் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் அதை தற்காலிகமாக அங்கீகரித்து விடப்போகிறது. ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவில் செல்லாது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பழனிசாமி தரப்பு ஆதரவாளரான செம்மலை இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், ''சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பு செல்லுமா, செல்லாதா? ஜூலை பதினோராம் தேதி நடந்த பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? என அந்த ஒரு கேள்விக்குத்தான் உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டும்; தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால், இன்றைக்கு அவர்கள் சொல்லி இருப்பதை நான் தீர்ப்பாக நான் கருதவில்லை.
அந்த ஆலோசனை எப்படி இருக்கிறது என்று சொன்னால் கீழ் கோர்ட்டில் தான் பஞ்சாயத்து பண்ணுவார்கள் அரசியல் கட்சிகளை வைத்து. உச்சநீதிமன்றதிற்கு என்ன வேலை என்று சொன்னால் இன்டர்ப்ரெட்டேஷன் ஆப் லா. சட்டத்தை வியாக்கியானம் செய்து தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் என்ன? இதற்கான காரணம் என்ன? கட்டாய கல்யாணம் செய்ய வற்புறுத்துவதை போன்று உள்ளது. உச்சநீதிமன்றத்தினுடைய இந்த ஆலோசனை. கட்டாய கல்யாணம் கூட அல்ல, விவாகரத்து ஆன கணவனையும் மனைவியையும் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்று சொல்வதை போல் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.