தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “வன்னியர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கான போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. மத்தியில் 2%, மாநிலத்தில் 20% என்பதே போராட்டத்தின் நோக்கம்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் அனைத்து ஜாதியினரையும் கணக்கெடுத்து ஜாதியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், மத்திய மாநில அரசுகள் ஜாதி வாரியான கணக்கெடுப்புகளை இதுவரை நடத்தவில்லை.
நானும், பல்வேறு வன்னிய அமைப்புகளும் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு தி.மு.க ஆட்சிக்கு வந்தால், உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். பா.ம.க தலைவர் ராமதாஸ் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையைக் கைவிட்டு தற்போது உள் ஒதுக்கீடு தந்தால் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் சமயத்தில் மருத்துவர் ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீட்டை நோட்டுக்கும் சீட்டுக்கான ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் தங்கள் சமூகத்திற்குத் தேவையான இட ஒதுக்கீட்டைக் கேட்டுப்பெறலாம் அதை விட்டுவிட்டு வன்னியர்களை வம்புக்கு இழுப்பதுபோல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.