தமிழக அரசின் சொத்துவரியை உயர்த்தும் முடிவைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது.
இந்நிலையில் சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சொத்துவரியை உயர்த்தியுள்ள முதல்வர் ஸ்டாலின் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவருடைய வீட்டு மக்களை பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். நாட்டில் என்ன நிலவரம் என்பதுகூட தெரியாமல் இருக்கிற ஒரே முதல்வர் நம் தமிழக முதல்வர் தான். கொரோனா தொற்றால் இரண்டாண்டு காலம் வேலை இல்லாமல் வாழ்வாதாரமே இழந்து இருக்கிற நிலையில் மக்கள் விரோத அரசு மக்கள் மீது மிகப்பெரிய வீட்டு வரிச்சுமையை சுமத்தியிருக்கிறது. அம்மாவின் அரசாங்கத்தில் வரியே உயர்த்தப்படாமல் இருந்தது. மத்திய அரசு வரியை உயர்த்தும்படி கூறவில்லை. மத்திய அரசு மீது பழிபோட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு.
மும்பை, கொல்கத்தாவில் வரி உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், டெல்லியில் வரி அதிகரிக்கவில்லை என்பதை மறந்துவிட்டார்கள். ஒப்பிட்டு பேசுவதற்கு இது நேரமா? இவர்களுக்கு எது சாதகமாக இருக்குமோ அதோடு மட்டும் ஒப்பிட்டு கூறுகிறார்கள். நிர்வாகத்திறன் இல்லாத கையாலாகாத ஒரு அரசாங்கம் ஸ்டாலின் தலைமையில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இந்தியாவிலியே புத்தக வடிவில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட கட்சி திமுகதான். செய்யவா போகிறோம், மக்களை ஏமாற்றத்தானே போகிறோம் என்று புத்தகமாக அடித்து வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் 487ஆவது வாக்குறுதியில் கொரானாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும்வரை சொத்துவரி அதிகரிக்கப்படாது என்று வாக்குறுதி தந்தார் முதல்வர் ஸ்டாலின். எதுஎதற்கோ தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு பேசும் நீங்கள் இதை ஏன் மறந்துவிட்டீர்கள்" எனக் கேள்வியெழுப்பினார்.