தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (28/03/2021) மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பங்கேற்றார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் எம்.பி., "அ.தி.மு.க. மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பார்க்கிறது பா.ஜ.க. கலைஞர், ஜெயலலிதா இல்லை என்பதால் தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வரானால்தான் பா.ஜ.க.வை விரட்டியடிக்க முடியும். உங்கள் கைகளிலே திணிக்கும் பணத்தை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தமிழகம் பக்கமே தலைவைத்து பார்க்கக்கூடாது என்ற அளவிற்கு பா.ஜ.க.விற்கு பதிலடி தர வேண்டும். இந்திய தேசத்தையே பாதுகாப்பதற்கான ஒரு அச்சாரம் தமிழக சட்டமன்றத் தேர்தல். வருங்காலத்தைக் காப்பதற்கான போர்தான் இந்த சட்டமன்றத் தேர்தல். எதிர் அணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல. அ.தி.மு.க., பா.ம.க.விற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.விற்கு போடும் ஓட்டு. 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும்" என்றார்.