தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கவும் பாஜக முயன்று வருவதாகக் கூறி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய திருமாவளவன், “அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். மேலும் இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு பலம் வாய்ந்த அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பாஜகவிற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் நடக்கும் யுத்தம் என திருமாவளவன் சொல்கிறார். அது அப்படி அல்ல. இது விடுதலை சிறுத்தைகளுக்கும் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம். இது இந்தியாவில் எத்தனை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் இயக்கம். எத்தனை தொண்டர்கள் இருக்கும் இயக்கம். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளையும் பார்க்கத்தான் போகிறார்கள்.
திருமாவளவனுக்கு துணை முதல்வர் ஆக வேண்டும் என ஆசை இருக்கிறது. அதனால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நான் கூட்டணியை விட்டு போய்விடுவேன் என சொல்லி வருகிறார். கூட்டணியை விட்டு வரவேண்டும் என்றால் தயவு செய்து வாருங்கள். நானே மாலையைப் போட்டு வெளியே வாருங்கள் என சொல்கிறேன். பாஜகவை திட்டி, காரணம் கண்டுபிடிப்பது போல் நாடகமாடுகிறார். நானும் ஒரு மாதமாக பார்த்துக்கொண்டு வருகிறேன். அவர் துணை முதல்வராக வரவேண்டும் என முடிவு செய்துவிட்டார். திருமாவளவனை சமூகநீதிக்கு எதிராக திமுக நடத்துகிறார்கள் என்றால் அவர் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டுமே. பாஜகவை திட்டி பில்டப் கொடுத்து வெளிவருவதற்கு எங்களை ஏன் பகடைக் காயாக உபயோகிக்கிறார்” என்றார்.