உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பா.ஜ.க சார்பில் தூய்மை பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் கோனியம்மன் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அலங்காநல்லூர் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் கோவிலோடு தொடர்புடையது. இதனை எம்.பி. சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா?. கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு தான் காளையை அவிழ்த்து விடுவார்கள். அது தான் இந்த நாட்டின் மரபு, பண்பாடு எல்லாமே. அதாவது, திமுகவும், கம்யூனிஸ்டும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் உடைய அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தை சீரழித்து அதை அவமானப்படுத்துவது தான் வேலையாக வைத்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டில் முதல் காளை சாமியோட காளை தான் முதலில் வெளியே வரும். அப்படியென்றால், கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க நினைக்கிறார்களா?. ஜல்லிக்கட்டு என்பது இந்து கலாச்சாரத்தில் ஒரு கூறு. அதனால் தான் காளையை சாமியோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். பொங்கல் என்பதே சூரிய கடவுளைப் பார்த்து கும்பிடுவது தான். வேறு மதத்தில் கற்பூரம், ஆரத்தி எதுவும் காட்டுகிறார்களா?. இந்து மதத்தில் தான் கற்பூரம் காட்டி திருநீறு பூசுகிறோம். இது முட்டாள்தனமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி. சனாதன தர்மம் மட்டும் தான் மனிதனை மட்டும் இங்கு இருக்கக்கூடிய மிருகத்தையும் சமமாக பார்க்க சொல்லிதரக்கூடிய ஒரு தர்மம்” என்று கூறினார்.
அப்போது அவரிடம், ‘அங்கே கோவில் வருவது எங்கள் பிரச்சனை கிடையாது. ஆனால், அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த மசூதி கட்டப்பட்டதே கோவிலை இடித்து தான் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனால், இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் நியாமாக இருக்கும். தமிழக முதல்வர் நேரில் கூட அழைப்பிதழை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மட்டுமல்ல அந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் நாங்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம். எப்படி, கிறிஸ்துவ கோவிலுக்கும், இஸ்லாமிய கோவிலுக்கும் சென்று அவர்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்கிறீர்களோ, அது போல் இந்த கோவிலுக்கும் வந்து ராம பக்தர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் அனைவருக்குமான நீதிக்கான அரசியலாக இருக்க முடியும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்ததின் உடைய அடுத்தக் கட்டம். இந்த நாட்டில் வருடம் முழுவதும் தேர்தல் நடத்துகின்ற பொழுது, அந்த மாநிலங்களில் எந்தவிதமான வளர்ச்சி பணியையும் மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆளுகின்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரம் எல்லாம் இதற்கு மட்டுமே செலவாகிறது. அதனால், சீர்திருத்தை நோக்கி உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள். அதை விட்டு புறக்கணிப்பதோ அல்லது மறுப்பதோ சரியாக வராது” என்று கூறினார்.