ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒடிசா ரயில் விபத்து குறித்துப் பேசுகையில், "ரயில்வே துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் கண் முன் நிகழ்ந்து வருகிறது. மத்திய அரசு 2014 இல் பதவி ஏற்கும் போது ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைத்தார்கள். முந்தைய ஆட்சியில் பட்ஜெட்டின் போது புதிய ரயில் பற்றிய அறிவிப்பு இருக்கும். ஆனால் செயல்பாட்டில் இருக்காது. புதிதாக உட்கட்டமைப்பு மற்றும் தண்டவாள வசதி பற்றி அறிவித்து இருப்பார்கள். ஆனால் பட்ஜெட்டில் அது பற்றிய அறிவிப்பு இருக்காது. பிரதமர் மோடி இதுவரைக்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள் என்று சொன்னார்.
தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் மதுரை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை கேட்டோம். அதனை மத்திய அரசு கொடுத்துள்ளது. ரயில் பாதைகளை மின்மயமாக்கி உள்ளனர். ஒடிசா ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமான மிகுந்த துன்பத்தை கொடுக்கக்கூடியது. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இதற்கு முன்பும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதில் இருந்து பாதுகாப்பான ரயில் பயணத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்பட்டது.
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பாதுகாப்பான பயணத்தை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. 15 வந்தே பாரத் ரயில் மூலம் பயண நேரத்தை குறைத்துள்ளனர். இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க நாட்டின் உட்சபட்ச விசாரணை அமைப்பான சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாட்டை மறந்துவிட முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை. எதையும் மூடி மறைக்க விரும்பவில்லை. யார் தவறு செய்திருந்தாலும் காப்பாற்ற நினைக்கவில்லை. தண்டவாளப் பராமரிப்பு பற்றி ரயில்வே துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.