நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647 ஆவது பிறந்தநாள் விழா ரவீந்திர மந்திர் வளாகத்தில் நடந்தது. இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சாதிகளை கடவுள் உருவாக்கவில்லை. இறைவன் முன் அனைவரும் சமமானவர்களே. சாமியார்கள் தான் சாதிகளை உருவாக்கினார்கள். இதை புனிதர் ரோஹிதாஸ் சொன்னதால் தான் புனிதரானார். உங்கள் மதங்களை கொண்டாடும் போது பிற மதங்களை அவமதிக்காமல் இருங்கள்.
உலகில் எந்த தொழிலையும் உயர்ந்தது தாழ்ந்தது என பிரிக்க முடியாது. தற்போது இருக்கும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளுக்கு இந்த மனப்பான்மைதான் காரணம். சமூக நலனுக்காக செய்யும் வேலைகளில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது. பாத்திரம் துலக்கி வாழ்வை நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தனியாக பான் மசாலா கடை வைத்து ரூ.28 லட்சம் வரை சம்பாதிக்கிறார். இளைஞர்களுக்கு இவை கண்ணில் படுவதில்லை. அவர்கள் முதலாளிகளின் பதிலுக்கு காத்திருக்கின்றனர். வேலை வேலை என அனைவரும் அலைகின்றனர்.
அரசு வேலைவாய்ப்புகள் 10% தனியார் வேலை வாய்ப்புகள் 20% எந்த ஒரு உலக நாடும் 30% க்கும் மேலான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. ஒரு வேலை உயர்ந்தது; மற்றொன்று தாழ்ந்தது என்ற பாகுபாட்டால் தான் இங்கு வேலை வாய்ப்பின்மை உருவாகிறது. ஒரு சிலர் தங்களது வாழ்வுக்காக வேலை செய்வார்கள். ஒரு சிலர் இந்த சமூக முன்னேற்றத்திற்காக வேலை செய்வார்கள். ஆனால் எல்லா வேலைகளும் சமுதாயத்திற்காகத்தான்” எனக் கூறினார்.