Skip to main content

“தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்..” - எல்.முருகன் பேச்சு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

"We are clear on who is the chief ministerial candidate of Tamil Nadu." - L. Murugan

 

“அ.தி.மு.க.வில் முதல்வராக இருப்பது பழனிசாமிதான், ஆனால் அ.தி.மு.க கூட்டணி முதலமைச்சர்  வேட்பாளர் யார் என்பது குறித்து பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும்.” என பா.ஜ.க. மாநிலச் செயலாளர் முருகன் கூறியிருக்கிறார். 


வேளாண் திருத்தச் சட்டம், விவசாயிகளை கார்பரேட்டுகளிடம் அடகுவைத்துவிடும், அதனால் இந்த அபாயகரமான சட்டத்தைச் திரும்பப் பெறவேண்டும் என டெல்லியில் விவசாயிகள் போராடிவருகின்றனர்.

 

அதே வேளையில் வேளாண் திருத்தச் சட்டத்தில் நன்மைகள் இருப்பதாக தமிழகம் முழுவதும் விவசாயிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் முருகன்.

 

ஒவ்வொரு இடத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பில், “வேளாண் சட்டத்தில் ஆயிரம் நன்மைகள் இருக்கிறது. அதை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக எதிர்க்கின்றனர்.” என்பதையே தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார். 

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தானே என்பது குறித்தான கேள்விக்கு, குழப்பமான பதிலையே கூறிவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க.தான் முடிவு செய்யும் என ஆரம்பத்தில் கூறியிருந்தார். அது சர்ச்சையாகி அ.தி.மு.க, பா.ஜ.க இடையே புகைந்தது.

 

தற்போது, “அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கிறார். பழனிசாமியை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சராக பழனிசாமிதான் தற்போது இருக்கிறார். தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் கட்சித் தலைமைதான் அறிவிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்