தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த பாஜக ரேஸில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை இடத்தை யாரால் நிரப்ப முடியும் என்று தனியார் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் தமிழிசை இடத்தை வானதி சீனிவாசனால் நிரப்ப முடியும் என்று 35% பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
அவருக்கு அடுத்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 11% பேர் ஆதரவு அளித்துள்ளனர். அந்த கருத்து கணிப்பில் எச்.ராஜாவிற்கு 9% பேரும், எஸ்.வி.சேகர் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 3 சதவிகித பேரும் ஆதரவு அளித்துள்ளனர். கட்சியின் மேலிடத்தில் எச்.ராஜாவிற்கு செல்வாக்கு இருந்தாலும் மக்கள் மத்தியில் அடுத்த தலைவருக்கு வானதி சீனிவாசன் சரியாக இருப்பார் என்று கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் தமிழிசை இடத்தை நிரப்ப முடியாது என்று 27% பேர் வாக்களித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் தனி முத்திரை பதித்த பாஜக தலைவர்களுள் ஒருவராக தமிழிசை தனது பெயரை நிலை நிறுத்தியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. மேலும் வானதி சீனிவாசனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதை பாஜக மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் ஒரு பெண் தலைவராக வர வாய்ப்பு இருக்கலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.