தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அனைத்துக் கட்சி கூட்டத்தையும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் கூட்டியது. அதேபோல், அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்க்கான விருப்ப மனுக்களையும் வழங்கிவருகின்றன.
இந்நிலையில், அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதிமுக மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ‘மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினரிடம் இருந்து ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒருசில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், ஒருசில பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தகைய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிமுக அலுவலகங்களில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000 கட்டணம் செலுத்தியும், நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ரூ.2,500 செலுத்தியும் மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மாவட்ட அதிமுக செயலாளர்கள், தலைமை அலுவலகத்தில் இருந்து அதற்கான விருப்ப மனுக்கள் மற்றும் ரசீது புத்தகங்களைப் பெற்றுச் சென்று, அது சம்பந்தமான விபரங்களை அதிமுகவினர் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.