கோரக்பூர் இடைத்தேர்தல் முடிவுகளை பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாற்ற முயற்சித்ததாக அம்மாவட்ட கலெக்டர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் பிரவீன் நிசாத் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி வேட்பாளர் ஏறுமுகத்தைச் சந்தித்தார்.
அப்போது, வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்கு வந்த கோரக்பூர் மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராட்டிலா வாக்கு விவரங்களை ஊடகவியலாளர்களுக்கு தரப்படுவதைத் தடுத்திருக்கிறார். அதேபோல், செய்தி சேகரிக்கும் நிருபர்களையும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் பகுதியில் இருந்து 15 அடி தூரத்திற்கு தள்ளி நிற்குமாறு கட்டளையிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடக்கும் கட்டிடத்தின் கதவு, ஜன்னல்களை திரையிட்டு மூடியிருக்கிறார்.
எதிர்க்கட்சியினர் மற்றும் செய்தியாளர்கள் நடத்திய போராட்டம் மற்றும் உபி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி ஆகியவற்றிற்குப் பின் ராஜீவ் ராட்டிலா அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.