தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் அவர், “சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றார் தலைவர் கலைஞர். அவரது வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் தருவேன் என்ற அவர், சொன்னபடியே 2 தவணைகளில் அதை தந்தார். மகளிருக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுத்தார். அதிமுக அதெல்லாம் எப்படி முடியும் என கேள்வி எழுப்பியபோது, அதை செய்து காட்டினார். ஒன்றிய அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் நம் முதல்வர்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையை முடக்கப் போகிறேன் என்கிறார். தமிழக சட்டசபையை உங்களால் முடிந்தால் முடக்கித்தான் பாருங்களேன். நமது மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 159 பேர் சட்டசபையில் உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் காணாமல் போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நான் மக்களோடு மக்களாக உங்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியை பெற்றவர்தானே அவர்” என்று பேசினார்.