பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிதாக மூன்று சட்டங்களை அறிமுகம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இறுதி நாளான நேற்று (11-08-23) அறிமுகம் செய்தது. இந்த மசோதா வழக்குகள் பதிவு செய்யும் முறை மற்றும் விசாரணை முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டு வரும் அளவிற்கு மக்களவையில் மூன்று சட்டத் திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். அதில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரத் நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிகள் சட்டத்தை பாரத் சாக்ஷ்யா எனவும் பெயர் மாற்றம் செய்யும் சட்டத்திருத்த மசோதா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சர் அறிமுகம் செய்த மசோதாக்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும். இது இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பதிவுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “இதுபோன்ற அற்ப அரசியல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் விருப்பங்களுக்கு நல்லது. ஆனால், இது இந்தியாவின் உணர்வை பலவீனப்படுத்துகிறது. தமிழின் பெருமையைக் காப்பவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தான் நமது புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் பெருமையான, புனிதமான செங்கோலை வைத்தபோது எதிர்த்தார்கள்.
பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் மொழியின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவது குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு காசி - தமிழ் சங்கமம் ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் கலாச்சாரத் தொடர்ச்சியும் இலக்கியப் பெருமையும் ஒரு சில குடும்பத்தினருக்கே சொந்தம் எனத் தவறான எண்ணம் கொண்டவர்களுக்கு இது மனவேதனையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.