சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 09.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கான உறுதிமொழியும் ரகசியக்காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்ட பின் அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின், உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அதில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-2023 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கபடி மற்றும் சிலம்பத்தினை சேர்ப்பது மற்றும் இதற்கு முன் 10 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை இனி 16 பிரிவுகளின் கீழ் நடத்தவும் கையெழுத்திட்டார். மேலும், இந்தக் கோப்பில் விளையாட்டுப் போட்டிகளை ரூ.47 கோடியே 4 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் நடத்தவும், போட்டிகளை நடத்துவதற்கான விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் போட்டிகளை நடத்தும் குழு ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களும் அடங்கும்.
இரண்டாவதாக நலிந்த நிலையிலுள்ள 9 விளையாட்டு வீரர்களுக்கு ஆயுட்காலம் வரை ரூ. 6000 ஓய்வூதியம் வழங்குவதற்கும் கையெழுத்திட்டார். மூன்றாவதாக துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான நிவேதிதா, பெருவில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு 4 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் கையொப்பமிட்டார்.