ஒரே நாடு ஒரே வானொலி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜனவரி 2021 முதல் தமிழ்நாடு, புதுச்சேரியின் அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களிலிருந்தும் நேரடி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் நிலையங்களிலிருந்து வெளியான தமிழ் சேவை நிறுத்தப்பட்டு, சென்னை நிலையத்தை மையமாக வைத்து ‘ஆகாசவாணி தமிழ்நாடு’ என்ற பெயரில் மட்டுமே நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நிலையங்கள் மையத்தொகுப்பிற்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்க முடியுமாம். இதே போல் பண்பலை அலைவரிசைகளும் ‘ ஆகாசவாணி தமிழ் ‘ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பப்படவிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவை துறைகளை ஒழித்துக்கட்டுவதின் தொடக்கமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இந்த புதிய ஏற்பாடு மாவட்ட வட்டாரங்களின் மொழி, பண்பாட்டு , வாழ்வியல் தனித்தன்மைகளை அழித்துவிட்டு, ‘ ஒரே நாடு ஒரே வானொலி ‘ என்ற ஒற்றையாக்கத்தில் போய் முடியும் அபாயத்தை எடுத்துக் காட்டுகிறது.
இதனால் நிறைய அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் வேலையிழப்பை எதிர்கொள்கிறார்கள். அங்கு பணியாற்றும் பல தமிழ் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வட்டார நிலையங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சமூக ஊடகங்கள்,இணைய வழி ஒலிபரப்பை முன்னெடுக்கும்போது ஒலிபரப்புத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முன்னெடுப்பு இயல்பாக தொடங்கி விடும் என குற்றம் சாட்டுகிறோம்.
ஆல் இந்தியா ரேடியோ , அகில இந்திய வானொலி என்றே தமிழ் நாட்டில் அறியப்பட்டு வந்த பொது சேவை ஒலிபரப்பின் பெயரை 'ஆகாசவாணி' என்ற வடமொழியாக்கும் முயற்சியையும் ஏற்க இயலாது.
தமிழகத்து வானொலி நிலையங்கள் ஆல் இந்தியா ரேடியோ என அறிவிப்பதற்கு மாற்றாக ஆகாசவாணி என அறிவிக்க வேண்டும் என்ற உத்திரவை திரும்பப் பெற வேண்டும். அது அகில இந்திய வானொலி சேவை என்றே குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வட்டார நிலையங்களை ஒழித்துக்கட்டி, அனைத்தையும் ஒற்றை அலைவரிசையாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றோம். எனக் கூறியுள்ளார்.