Skip to main content

“மாநில அரசு கேட்கும் நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்” - ஆளுநரிடம் விஜய் கோரிக்கை

Published on 30/12/2024 | Edited on 30/12/2024
TVK Vijay meet Tamilnadu Governor RN Ravi

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (30-12-24) சந்தித்துப் பேசினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் விஜய் மனு அளித்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பின் போது விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

ஆளுநருடான சந்திப்பு குறித்து த.வெ.க பொது செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். 

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்