Published on 17/07/2019 | Edited on 17/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. தினகரனின் அமமுக கட்சியும் போட்டியிட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தினகரன் கட்சியில் இருந்து திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வந்தனர். சேலத்தில் அமமுகவின் செயல் வீரர்க கூட்டத்தில் பேசிய தினகரன், தமிழகத்தில் எந்த துறையும் சிறப்பாக இயங்கவில்லை. கல்வித் துறையும் முறையாக செயல்படவில்லை. மேலும் மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் அதிமுக அரசால் நீட் தேர்வுக்கான விலக்கு கூட பெற முடியவில்லை என்ற சூழல் உள்ளது.

எட்டுவழி சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டத்தில் மக்கள் உணர்வுக்கு மரியாதை அளிப்பதாக தேர்தலின் போது கூறிய முதல்வர், தற்போது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதியில் மட்டும் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. சட்டமன்ற தேர்தல் வரும்வரை உள்ளாட்சி தேர்தலை காலம் கடத்தி விடுவார்கள். மேலும் அமமுக வலுவாக உள்ளது. யாரோ ஒரு சிலர் சுய விருப்பம் காரணமாக விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார். அதே போல் கட்சியை பதிவு செய்வதற்கான பணியில் இருப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் கூறினார்.