இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
இந்திய வருகையின் போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத் மாநிலத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ட்ரம்ப்பின் முதல் இந்திய பயணமான இதில் குஜராத் மாநிலத்திற்கு அவர் பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி விரும்பினார். அதற்காகவே குஜராத் மாநிலம் தேர்வுசெய்யப்பட்டது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ட்ரம்ப் பயணம் செய்வது தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயணம் செய்யும் வழியில் ஒரு நீண்ட தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்பு சுவருக்கு பின்னால் ஏராளமான குடிசைவாசிகள் வசித்து வருகின்றனர். இது இந்திய அளவில் தற்போது பேசுபொருளாக மாறிவிட்டது. இந்தியா என்பது ஒரு வளர்ந்த நாடு என பிரதமர் மோடி உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவில் நடைபெறும் அனைத்து பரிமாற்றங்களும் டிஜிட்டல் என்று கூறி வருகிறார். இந்தநிலையில், இந்தியாவில் குஜராத் உட்பட பல்வேறு பகுதிகளில் ஏழைகள் இருப்பதாக அமெரிக்க அதிபருக்கு காட்டக்கூடாது என்பதால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட சுவர்களை அமைத்து, அந்த சுவர்களில் ட்ரம்ப் மற்றும் மோடியை புகழ்ந்து பாடுகிற வசனங்களை அமைத்துள்ளார்கள்.
இந்த தகவல் சர்வதேச சமூகத்திற்கு தெரிய வந்து, ட்ரம்ப்புக்கும் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் இந்தியா வரும் ட்ரம்ப் இந்த தடுப்பு சுவரை உள்ளடக்கிய பகுதியில் போகும்போது வண்டியை நிறுத்தி அந்த சுவரை பார்க்க வேண்டும் எனவும் சில மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி, ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்த குஜராத்தில் வறுமை உள்ளது என்பதை அவர் கண்கூடாக பார்க்க வாய்ப்பிருக்கிறது எனவும் கூறுகின்றனர். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி சொல்வதுபோல, இந்தியா என்பது ஒரு வல்லரசு நாடு, ஒரு டிஜிட்டல் நாடு என்பதெல்லாம் பொய் என்பதை அமெரிக்க அதிபர் கண்கூடாக காண போகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதனால்தான் இந்தியாவோடு தற்போதைக்கு எந்த வர்த்தக ஒப்பந்தமும் அமெரிக்கா செய்யவில்லை என கூறப்படுகிறது.