சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் திருவள்ளூரில் இன்று நடைபெற்றது. அதே சமயம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வில் இருந்து வருகிறார். எனவே இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்வரின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் முன்பு வாசித்து காட்டினார்.
அதில், “ உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். கட்சிக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களையும் முழுமையாகth தெரிந்துகொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாகிய உங்களிடம் மக்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். இதனை அமைச்சர்களிடமும், மாவட்ட செயலாளர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உத்தரவாகவே சொல்லி இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதே மாதிரியான சாதனைகள் ஒன்றிய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்று தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்தியா கூட்டணி வெற்றிக்காக .நாம் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், நாம் செய்த, செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல் பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்காக எந்த சிறப்பு திட்டங்களையும் கொண்டு வராமல், தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. பாஜகவின் இந்த துரோகத்தையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டு தொடக்க உரை மட்டும் ஆற்றியது குறிப்பிடத்தக்கது.