தி.முக. இளைஞரணிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு ஏற்கப் போறாருங்கிறது லேட்டஸ்ட் பரபரப்பு. எம்.பி. தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சளைக்காம எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரு. மற்ற சீனியர்கள் அந்தளவு போகலை. பெரும்பாலானவங்க எம்.பி. வேட்பாளரானதால அவங்கவங்க தொகுதியைத் தான் பார்க்க முடிஞ்சுது. கூட்டணிக் கட்சிகளிலும் வைகோ தவிர வேறு யாரும் பெருசா பிரச்சாரம் பண்ணமுடியாதபடி அவங்கவங்களுக்கும் தொகுதி வேலைகள் இருந்தன. ஸ்டாலினுக்கு அடுத்தபடியா தி.மு.க. சார்பில் அதிகளவில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளில் பிரச்சாரம் செய்தவர் உதயநிதிதான். ஒவ்வொரு இடத்திலும் கூட்ட ஏற்பாடுகள் சிறப்பா இருந்தது. சினிமா நடிகர்ங்கிறதால பொதுமக்களும் ஆர்வமா வந்தாங்க. அவரும் ஆளுங்கட்சிக்கும் மத்தவங்களுக்கும் தனி ஸ்டைலில் பதிலடி கொடுத்து கூட்டத்தைக் கவர்ந்தாரு. தேர்தல் முடிவுகள், தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரும் வெற்றியைக் கொடுத்திருப்பதால, உதயநிதிக்கு இளைஞரணி தலைமைப் பதவி தரணும்ங்கிற வலியுறுத்தல் அதிகமாயிடிச்சி.
சித்தரஞ்சன் சாலை வீட்டிலிருந்துதான் இந்த ஆலோசனை தொடங்கியிருக்கு. உதயநிதிக்குப் பக்க பலமா இருக்கும் அன்பில் மகேஷ் இது தொடர்பா கட்சி நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டப்ப, பல மா.செ.க் களும் உதயநிதிக்கு இளைஞரணின்னு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. டி.ஆர்.பாலு போன்ற சீனியர்களும் இதை வலியுறுத்த, ஸ்டாலினுக்கு மட்டும் கொஞ்சம் யோசனையா இருந்திருக்கு.அவர் இளைஞரணி பொறுப் புக்கு வந்தப்ப கலைஞரும் ஆரம்பத்தில் யோசிச்சாரே? ஸ்டாலினுக்கு இளைஞரணிப் பொறுப்பு கொடுக்கணும்னு, அப்ப கலைஞரிடம் ஆரம்பத்தில் பரிந்துரை செய்தவர், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன்தான். அதேபோல், இப்ப உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிப் பொறுப்பைக் கொடுக்கணும்னு தங்கம் தென்னரசு உள்ளிட்டோரின் ஆதரவுக் கோரிக்கை ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கு. எந்த நேரத்திலும் பொறுப்பு அறிவிக்கப்படலாம்ங்கிற எதிர்பார்ப்பு இருக்குது.
இது பற்றி திமுக தொண்டர்களிடம் விசாரித்த போது,வெற்றி கிடைச்சிருக்கிற நேரத்துல, அதுக்காக உழைச்சவருக்கு பரிசா பதவி தரலாம்ங்கிறது ஒரு தரப்பின் கருத்து. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அது கட்சிக்கு உதவும்ங்கிறாங்க. இன்னொரு தரப்போ, தி.மு.க.வில் பெரிய பதவி எல்லாமே கலைஞர் குடும்பத்துக்கு மட்டும்தான் கிடைக்கும்ன்னு எடப்பாடி தொடங்கி அ.தி.மு.க.வில் அத்தனை பேரும் விமர்சனம் பண்ணுற நேரத்தில், உதயநிதிக்கு உடனடியா பதவி கொடுத்தால், அது தேவையில்லாத விவாதங்களை உருவாக்கும். ஆட்சியை தி.மு.க. பிடிக்கிற வரை, இப்ப கடைப்பிடிச்ச நிதானத்தை ஸ்டாலின் கடைப்பிடிக்கலாம்னு சொல்றாங்க. தி.மு.க.வைப் பொறுத்தவரை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் ஸ்டாலின் கையில் இளைஞரணி இருந்தது. வலுவான கூட்டணி வச்சிருந்தாரு. அப்புறம், வெள்ளக்கோவில் சாமிநாதன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சப்ப, நிர்வாகிகள் ஒத்துழைப்பு சரியா கிடைக்கல. இப்ப தமிழக அரசியலில் இளம் வாக்காளர்களை குறிவச்சி புதுப்புதுக் கட்சிகள் வருவதால் தி.மு.க. இளைஞர்களை ஈர்க்க உதயநிதி போன்ற முகம் தேவைப்படுதாம்.