எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் அச்சத்துடன் இருந்த வேளையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தூய்மைப் பணியாளர்கள். பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பணி என்பது மிகவும் அசாதாரணமானது.
அந்தப் பணிகளின் காரணமாகவே அவர்களில் ஏராளமானவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகினர், பலர் உயிரிழந்தனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது சுகாதர பணிகளின் மேற்கொண்ட அவர்களைப் பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அவர்களின் பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த சுமார் 700 பேர், எவ்வித நோட்டீஸூம் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனியாருக்கு நகரின் தூய்மை பணியை தாரை வார்த்து, 10 வருடங்களாக நகரின் தூய்மைப் பணிக்காக தியாகம் செய்தவர்களைத் தூக்கிவீசுவது கண்டிக்கத்தக்கது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் போற்றப்பட வேண்டியவர்களாக அரசால் சுட்டிக்காட்டப்பட்டவர்களை, இன்று அந்த அரசே போய் வாருங்கள் என தூக்கி வீசுவது உள்ளபடியே வேதனை அளிக்கின்றது.
ஆகவே, பணி நீக்கம் செய்யப்பட்ட 700 தொழிலாளர்களின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, கொரோனா முன்களப் பணியார்களான அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.’ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.